மனிதனின் உடலையும், உள்ளத்தையும், சிந்தனைகளையும் பக்குவப்படுத்தி
இவ்வுலகிலும் மறு உலகிலும் இன்பகரமான நல்வாழ்வுக்கு பயிற்சியளிக்கும்
திட்டங்களைக் கொண்டதே இந்த ரமழான் நோன்பு.
பெருமானார் (ஸல்) அவர்கள் நோன்பின் இலட்சியத்தைப் பின்வருமாறு
விளக்கியுள்ளார்கள். பொய்யையும் பொய்யை தழுவிய செயலையும் விடாமல் உணவையும்
குடிப்பையும் விட்டுவிடுவதில் அல்லாஹுத்தஆலாவுக்கு எவ்விதத் தேவையும்
இல்லை. விழித்து வணங்கும் பலருக்கு கண் விழிப்பை விடுத்து எப்பயனும் இல்லை.
நோன்பு நோற்கும் பலருக்கு பசியையும் தாகத்தையும் சகித்துக் கொண்டதை
தவிர்த்து வேறு எப்பயனும் கிடையாது.
மனிதன் உணர்ச்சிகளையும் தேவைகளையும் ஆசைகளையும் கட்டுப்படுத்தி
செம்மைப்படுத்துவதிலும் இயல்பூக்கல்களை வசப்படுத்தி மனிதனை அவைகளின்
எஜமானாக்குவதிலும் நோன்பு உயர்ந்த இடத்தை வகிக்கின்றது.
நோன்பின் மூலம் மனிதன் நாளொன்றுக்கு ஏறத்தாழ பதின்நான்கு
மணித்தியாலங்கள் அல்லாஹ்வின் நினைவை உள்ளத்தில் நிறுத்தி நீண்ட
பயிற்சியொன்றைப் பெறுகின்றான். இப்பயிற்சியை ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு
தொடர்ச்சியாக பெறுகின்றான்.
நோன்பானது இறையச்சத்தையும், பொறுப்புணர்ச்சியையும், பொறுமையையும் ஏற்படுத்துகின்றது.
செல்வந்தர்கள், வறியோரின் பசியை அறிவதற்கும் அவர்கள் மீது இரக்கம்
கொள்வதற்கும் வாய்ப்பினை அளிப்பதுடன் சமூகத்தில் பொருளாதார ரீதியிலான
மேடுபள்ளங்களை சமப்படுத்துவதற்கான மனோபக்குவத்தை தோற்றுவிக்கின்றது.
மனிதனின் குடலிலும், இரைப்பையிலும், இரத்தத்திலும் ஏற்படக்கூடிய பலவகையான நோய்களுக்கு அரிய சிகிச்சையாக நோன்பு அமைகின்றது.
இந்த நோன்பின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவெனில் ஏனைய எல்லா வகை
இறைவணக்கங்களும், அமல்களும் மற்றவர்களால் காணக்கூடிய வாய்ப்புகளுண்டு,
ஆனால் இந்த நோன்பு மட்டும் இறைவனாலும் நோன்பு நோற்பவனாலும் மட்டுமே
அறியப்படுகிறது.
இஸ்லாமிய உம்மத்துக்கள் தொழுகை, நோன்பு, திக்ர் மூலமே, அல்லாஹ் தஆலாவை அணுகி அவனின் அன்பர்களாகலாம்.
நோன்பாளி பொய், புறம், கோள், பரிகாசம், திட்டுதல் முதலானவற்றை இயன்றளவு
குறைத்து ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி, உடலும் உள்ளமும் தூய்மையாக
இருப்பதுடன் அதிகமான தொழுகைகள், குர்ஆன் ஓதுதல், ஸதகா செய்தல், இத்திகாப்,
துஆ, திக்ர் போன்றவற்றில் அதில் நேரத்தை ஈடுபடுத்துவதனால் பல்வேறு தீய
விளைவுகள் குறைந்து நல்லெண்ணங்களும் நற்கருமங்களும் மேலோங்க வாய்ப்புண்டு.
லைலதுல் கத்ர் எனும் மகத்தான இரவு ரமழான் மாதத்தின் முக்கிய
சிறப்பம்சமாகும். மனிதனின் மரணத்திற்கு பின்னரான நிலையான பெரு வாழ்வுக்காக
ஆயத்தம் செய்யும் ஒரு அரிய சாதனமாக இந்த லைலதுல் கத்ர் இரவு அமைகின்றது.
அல்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் இந்த இரவை ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது என
சிறப்பித்துக் கூறப்படுகின்றது.
நல்லடியார்கள் இந்த இரவை தொழுகை, இபாதத்,
திக்ர்களில் ஈடுபடுத்தி பயன் பெறுவார்கள்.
நாமும் இத்தகு சிறப்பு மிகு ரமழான் நோன்பை நோற்பதன் மூலம் இறையருளை
பெற்றுக் கொள்வதுடன் உடல், உள, சிந்தனை நலன்களையும் பெற்றுக் கொள்வோமாக.
Comments[ 0 ]
Post a Comment