மூன்று மாகாண சபை தேர்தலிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்
தலைமையிலான ஐக்கிய
மக்கள் சுதந்திர முன்னணி இரண்டு மாகாண சபைகளில் அறுதிப் பெரும்பான்மை பெற்று அமோக
வெற்றியீட்டியுள்ளது.
வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலேயே ஐ.ம.சு.முன்னணி இந்த அமோக வெற்றியைப்
பெற்றுள்ளது.
வட மேல் மாகாண சபையிலுள்ள 52 ஆசனங்களில் 34 யும், மத்திய மாகாண சபையிலுள்ள 58
ஆசனங்களில் 36 யும், ஐ.ம.சு. முன்னணி வென்றெடுத்துள்ளது. அதேநேரம் வரலாற்றில்
முதற்தடவையாக நடைபெற்ற வட மாகாண சபை தேர்தலிலும் 07 ஆசனங்களை ஐ.ம.சு.மு. பெற
தவறவில்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தூர நோக்குடன் கூடிய திறன் மிக்க
தலைமைத்துவத்திற்கும், மஹிந்த சிந்தனை தேசிய வேலைத்திட்டத்திற்கும், ஜனாதிபதி
தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் துரித அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கும்
மக்கள் அளித்திருக்கும் மிகத் தெளிவான அங்கீகாரமே இத்தேர்தல் வெற்றி என்று அரசியல்
அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் நாட்டில் முப்பது வருட காலம் நீடித்த பயங்கரவாத செயற்பாடுகளை முழுமையாக
ஒழித்து அச்சம், பீதியற்ற சுதந்திரமான சுபீட்ச வாழ்வு நிலையை வடக்கு மக்களுக்குப்
பெற்றுக்கொடுத்த ஜனாதிபதி அவர்கள், வட மாகாண மக்கள் தங்கள் பிரதிநிதிகளை எவ்வித
அழுத்தங்களுமின்றி, சுதந்திரமாக தெரிவு செய்வதற்கு ஏற்ற சூழலையும் ஏற்படுத்தி
கொடுத்தார்.
அதன் பயனாகவே அகில இலங்கை தமிழரசுக்கட்சி வட மாகாண சபை தேர்தலில் வெற்றி
பெற்றுள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
வடக்கு, வடமேல், மத்தி ஆகிய மூன்று மாகாண சபைகளுக்குமான மாகாண சபைத் தேர்தல் கடந்த
சனியன்று (21.09.2013) நடைபெற்றது.
பத்து மாவட்டங்களிலுள்ள 54 தேர்தல் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.
142 மக்கள் பிரதிநிதிகளை நேரடியாகத் தெரிவு செய்வதற்காக இத்தேர்தல் நடைபெற்றது.
மாகாணத்திற்கு இருவர் வீதம் 06 பேர் போனஸ் படி தெரிவாவர். என்றாலும் 3785 பேர்
அபேட்சகர்களாகக் களமிறங்கினர். அவர்களில் 2279 பேர் 15க்கும் மேற்பட்ட அரசியல்
கட்சிகள் சார்பாகப் போட்டியிட்டனர். 1506 பேர் சுயேச்சை குழுக்கள் சார்பாக
களமிறங்கினர்.
142 மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய 43 இலட்சத்து 58 ஆயிரத்து 263 பேர்
வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
இம்மூன்று மாகாணங்களுக்குமான தேர்தல் தினத்தன்று ஓரிரு சிறு சம்பவங்களை தவிர மிக
அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெற்றதாக பெப்ரல் உள்ளிட்ட தேர்தல் கண்காணிப்பு
பணிகளில் ஈடுபட்டிருந்த அமைப்புகள் அறிவித்தன. இதனைத் தேர்தல் ஆணையாளர் மஹிந்த
தேசப்பிரியவும் அதே தினத்தன்று மாலையில் பகிரங்கமாக அறிவித்தார்.
சனியன்று நடைபெற்ற இத்தேர்தலுக்கான வாக்களிப்பின் முதலாவது முடிவு அதே தினத்தன்று
இரவு 8.30 மணியளவில் வெளியானது. அது முல்லைத்தீவு மாவட்டத்தின் தபால் மூல
வாக்களிப்பு முடிவாகும். அம்முடிவில் இலங்கை தமிழரசுக் கட்சி அதிக வாக்குகளைப்
பெற்றிருந்தது.
அதேநேரம் இத்தேர்தலுக்கான வாக்களிப்பின் தொகுதிக்கான முதலாவது முடிவு நேற்று அதிகாலை
1.45 மணியளவில் வெளியானது. அதுவும் முல்லைத்தீவு தொகுதிக்கான முடிவாகவே இருந்தது.
அத்தொகுதியில் அ.இ. தமிழரசுக் கட்சி அதிகப்படியான வாக்குகளை பெற்றது. எனினும் நேற்று
காலை 10.00 மணியாகும் போது 54 தொகுதிகளதும் முடிவுகள் யாவும் அறிவிக்கப்பட்டு
நிறைவுற்றன.
என்றாலும் 54 தொகுதிகளிலும் 39 தொகுதிகளில் ஆளும் ஐ.ம.சு. முன்னணியே அமோக வெற்றி
பெற்றிருக்கின்றது. அதேநேரம் தமிழரசுக் கட்சி 14 தொகுதிகளையும், ஐக்கிய தேசியக்
கட்சி ஒரு தொகுதியையும் வெற்றி பெற்றன.
அதேவேளை, ஐ.ம.சு. முன்னணி ஒவ்வொரு தொகுதியையும் அதிகப்படியான வாக்கு
வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றது.
குறிப்பாக நுவரெலியா, மஸ்கெலியா தொகுதியில் 98,226 மேலதிக வாக்குகள்
வித்தியாசத்திலும், பண்டுவஸ்நுவ தொகுதியில் 35,518 மேலதிக வாக்குகள்
வித்தியாசத்திலும், நிக்கவெரட்டிய தொகுதியில் 30,987 மேலதிக வாக்குகள்
வித்தியாசத்திலும், ஆனமடுவவில் 29,212 மேலதிக வாக்குகள் வித்தியாசத்திலும் என்றபடி
ஐ.தே.க.வை. ஐ.ம.சு.மு. வெற்றி பெற்றிருப்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இத்தேர்தலிலும் ஐ.தே.கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. அத்தோடு மக்கள் விடுதலை
முன்னணியும் 142 மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட
இத்தேர்தலில் ஒரே ஒரு உறுப்பினரை பெற்றெடுத்து பாரிய படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
இத்தேர்தலில் ஐ.ம.சு.மு. 148 மக்கள் பிரதிநிதிகளில் 77 பேரை தமதாக்கிக்
கொண்டுள்ளதுடன் வட மேல் மற்றும் மத்தி ஆகிய இரு மாகாணங்களிலும் அறுதிப் பெரும்
பான்மையும் பெற்றுள்ளது. அதேவேளை வரலாற்றில் முதற் தடவையாக நடைபெற்ற வடக்கு மாகாண
சபைத் தேர்தலிலும் 07 ஆசனங்களை ஐ.ம.சு.மு. தனதாக்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால் வட
மாகாண சபையில் 30 ஆசனங்களை அ.இ.த.கட்சி பெற்றுள்ளது.
இம்மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலில் ஐ.தே.க.வுக்கு கிடைக்கப் பெற்றிருப்பதோ 28
ஆசனங்கள் மாத்திரமே. அதிலும் வட மாகாண சபையில் அக்கட்சிக்கு எந்தவொரு ஆசனமுமே
கிடைக்கப்பெறவில்லை.
இதேநேரம் ஆளும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
மூன்று மாகாணங்களிலும் தனித்துப் போட்டியிட்டு 04 ஆசனங்களையும் மத்திய மாகாணத்தில்
தனித்து போட்டியிட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இரண்டு ஆசனங்களையும், மலையக
மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தையும் தமதாக்கிக் கொண்டுள்ளன.
அதேநேரம் ஜனநாயகக் கட்சி வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் 05 ஆசனங்களை
பெற்றுக்கொண்டுள்ளது.
http://www.thinakaran.lk/2013/09/23/?fn=n1309231
Comments[ 0 ]
Post a Comment