சிரியாவில் கடந்த வாரம் இடம்பெற்ற இரசாயன தாக்குலுக்கு பதிலடி
கொடுக்கும் வகையில் சிரியா மீது தாக்குதல் நடத்துவது குறித்து அமெரிக்கா
மற்றும் அதன் கூட்டு நாடுகள் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இரசாயன
தாக்குதல் நடத்தப்பட்டதற்கான மறுக்க முடியாத ஆதாரம் இருப்பதாக அமெரிக்கா
குறிப்பிட்டுள்ளது.
மறுபுறத்தில் ஐ.நா. வின் இரசாயன ஆயுதம் தொடர்பான நிபுணர் குழு தாக்குதல்
இடம்பெற்ற டமஸ்கஸின் புறநகர் பகுதியில் இரண்டாவது நாளாக நேற்றைய
தினத்திலும் தனது சோதனைகளை மேற்கொண்டது. இங்கு பயணம் மேற்கொள்ளும் போது
ஐ.நா. குழுவின் வாகனம் மீது நேற்று முன்தினம் ஸ்னைப்பர் தாக்குதல்
நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சிரியா மீது எதிர்பாராத இராணுவ நடவடிக்கை தொடர்பிலான திட்டங்கள்
வகுக்கப்பட்டு வருவதாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூனின் பேச்சாளர்
தெரிவித்துள்ளார். சிரிய சர்ச்சை தொடர்பில் இணக்கப்பாடொன்றை எட்டும் முகமாக
டேவிட் கெமரூன் நேற்று முன்தினம் தனது விடுமுறையை ரத்துச் செய்து
திரும்பியுள்ளார்.
ஆனால் சிரியா விவகாரத்தில் சர்வதேச சமூகம் சர்வதேச சட்டத்தை மதித்து
முன் யோசனையுடன் செயற்படுமாறு ரஷ்ய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர்
அலக்சாண்டர் லுகஷ்விக் எச்சரித்துள்ளார்.
“பாதுகாப்புச் சபையை மீறி மீண்டும் ஒருமுறை குறுக்குவழியில் இராணுவ
தலையீட்டை நியாயப்படுத்தும் செயற்கையான கள நிலவரத்தை உருவாக்கி சிரியாவில்
மேலும் மோசமான நிலை ஏற்படுத்தப்படவுள்ளது. இது மத்திய கிழக்கு மற்றும் வட
ஆபிரிக்கா என பிராந்தியத்திலேயே பேரழிவு சூழலை ஏற்படுத்தும்” என்று ரஷ்ய
வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் எச்சரித்துள்ளார்.
சிரிய விவகாரம் குறித்த ரஷ்யாவுடனான இராஜதந்திர பேச்சுவார்த்தையை
அமெரிக்கா கடந்த திங்கட்கிழமை ஒத்திவைத்தது. தற்போதைய இரசாயன தாக்குதல்
குறித்த ஆலோசனைகள் முன்னெடுக்கப்படுவதாலேயே இந்த பேச்சுவார்த்தை
ஒத்திவைக்கப்பட்டது என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
எனினும் அமெரிக்காவின் முடிவுக்கு ரஷ்யா தனது அதிருப்தியை
வெளியிட்டுள்ளது. சிரியா பிரச்சினை குறித்து அரசியல் தீர்வு காண்பதற்கு
அமெரிக்காவும் ரஷ்யாவும் இன்று புதன்கிழமை ஹேகில் கூடி பேச்சு வார்த்தை
நடத்த முன்னர் திட்டமிட்டிருந்தது. சிரியா விவாகரத்தில் துருப்புக்களை
காட்டி அச்சுறுத்துவதை விட நிரந்தர அரசியல் தீர்வை எட்டுவது
பயன்தரக்கூடியதாக இருக்கும் என ரஷ்ய துணை பாதுகாப்பு அமைச்சர் கென்டி
கட்டிலே அறிவுறுத்தியுள்ளார்.
பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் கடந்த திங்கட்கிழமை ரஷ்ய ஜனாதிபதி
விலாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சிரிய அரசு இரசாயன
தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என கெமரூன்
குறிப்பிட்டதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
சீன அரச செய்திச் சேவையான ஷின்ஹோ குறிப்பிடுகையில், ஐ.நா. நிபுணர் குழு
சிரியாவில் தனது சோதனையை முடிக்கும் முன்னரே மேற்கு சக்திகள் யார் இரசாயன
ஆயுதத்தை பயன்படுத்தியது என முடிவு காண முயற்சிக்கிறது என குற்றம் சாட்டி
இருந்தது.
Comments[ 0 ]
Post a Comment